Tuesday 10 April 2012

அகநானூற்றில் அன்பின் வலிமையும் நட்பின் உயிர்மையும்-முனைவர் மு. மூர்த்தி


அகநானூற்றில் அன்பின் வலிமையும் நட்பின் உயிர்மையும்

மாந்தர்தம் அகம், புறம் சார்ந்த வாழ்க்கை முறைகளைக் காட்டுவன சங்க இலக்கியங்கள். இவ்விலக்கியங்களில் அகப்பாடல்களே மிகுதியாகும்.  அகப்பொருளே மிகுதியாகக் கூறப்படினும் அகவாழ்வியலை ஒட்டி புறவாழ்வியல் கூறுகளும் முறையே கூறப்பெற்றுள்ளன.  அவ்வகையில் அகநானூற்றில் அன்பின் செழுமை வலிமை பெறுவதும் அந்த அன்பு நிலைபெறுவதற்கு நட்பு துணை புரியும் பாங்கினையும் அறிந்து போற்ற முடியும்.

அகநானூற்றுப் பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களை விரிவாக எடுத்து விளம்புகின்றன.  இச்சிறப்புக் கருதியே அகம் என்ற பெயரை அகப்பொருள் என்று பொருள் என்று பொருள்படும் பொதுப்பெயரை இந்த நானூறு பாடல்களுடன் இணைத்தனர் என்று சாமி. சிதம்பரனார் எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.(பக்.90) அந்நிலையில் இந்நூல் ‘அகம்‘ என்னும் சொல்லை நேரிடையாகப் பெற்று தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழர்தம் வாழ்வியலிலும் சிறந்து நிற்கிறது.  பிற இலக்கியங்களைப் போலன்றி பாடலடிகள் மிகுதியாக உள்ளதால் அகத்தின் ஆழத்தையும் நட்பின் உயிர்மையையும் வரலாற்று நிகழ்வுகளையும் விரிவாகக் கூற முடிந்துள்ளது.

அகம் பொதுமையாதல்

அகத்தின் சிறப்பு பொதுமைஎன்னும் பண்பால் அமைந்ததாகும்.  அவ்வகையில் அகஇலக்கியத்தில் மாந்தர்களின் பெயர்கள் சுட்டிக் கூறப்படமாட்டாது என்பது தொல்காப்பிய மரபாகும்.
மக்கள் நுதலிய அகனைந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர் ( அகத்திணையியல் நூ,54)

இத் தொல்காப்பிய மரபைப் பின்பற்றி அக இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழன், தோழி, நற்றாய், செவிலி, பாணன், பாடினி என்றவாறு பொதுமைப்படுத்தப்பட்டு மக்கள் எல்லோருக்கும் எப்பொழுதும் பொருந்தும் நிலையில் அமைந்துள்ளதை அறிந்து போற்ற முடியும்.



அகத்தின் சிறப்பில் நட்பின் உயிர்மை:

தமிழர்தம் அகவாழ்வியலில் தலைமக்களின் சேர்க்கை முதன்மையானது, இச்சேர்க்கையில் தோழன், தோழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விருவரிலும் தோழியின் செயல்பாடுகள் மிகுதியானவை என்பதை அகநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.
தலைவிக்கு நல்வாழ்வு அமைவதில் பெரிதும் மகிழ்பவள் தோழியே. தம் தோழியாக தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமலே காலம் கடத்துவதைக் கண்டு, அவன் மனதில் பதியுமாறு நல்வார்த்தைகளைக் குறிப்பாகக் கூறுவாள். அவன் நாட்டில் விலங்குகள் இயல்பாக இன்பத்தைப் பெறுவதைச் சுட்டிக்காட்டி, எதிர்பார்ப்புடன் அன்பிணைப்பில் எம்தலைவியை அணுகினால் நிலையான இன்பத்தை எளிதில் பெற முடியும் என்று தலைவனின் மனதில் பதியுமாறு நல்வார்த்தைகளைக் குறிப்பாகக் கூறுவாள். அவன் நாட்டில் விலங்குகள் இயல்பாக இன்பத்தைப் பெறுவதைச் சுட்டிக்காட்டி, அன்பினணப்பில் எம் தலைவியை அணுகினால் நிலையான இன்பத்தை எளிதில் பெறலாம் என்று தலைவனின் மனதில் பதியுமாறு நட்புணர்வுடன் எடுத்துரைக்கிறாள்.           
.
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய ( அகம், பா, 2, 8 10)

என்னும் பாடலடிகள் மூலம் தலைவன், தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் நிலையைத் தலைவனுக்குத் தோழி உருவாக்குவதை உணரலாம். இக்கூற்றுடன் நின்றுவிடாமல் தனக்கும் தலைவிக்கும் உள்ள நட்பின் உயிர்மையையும் ஒருமித்த அன்பையும் முறையே எடுத்துரைக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

தலைவனை நோக்கி, எம் தலைவி மீது நீ மட்டும் மிகுதியும் அன்புடையவனாய்க் கருதுகிறாய்.  அவள் மீது பெற்றோரும் நானும் உயர்வான அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவன் உணருமாறு எடுத்துரைக்கிறாள்.  எங்கள் நட்பு என்றும் பிரிக்க முடியாததாகும்.

யாமே பிரிவு இன்று இயந்து துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”(பா.12, 4-5)

என்னும் அகநானூற்றுப் பாடலடிகள் தோழியின் கூற்றாய் அமைந்து, எங்களின் அன்பு நட்பால் வலிமை பெற்றுள்ளது என்பதைத் தலைவனுக்குச் சுட்டக் காட்டுவாள்.  எனவே, எம் தலைவியைக் களவில் சந்திப்பதைத் தவிர்த்து கற்பு மணமாகிய இனிய வாழ்வை எதிர்கொள்.  அப்பொழுதுதான் அவள் மீது அன்புள்ள பெற்றோர்களும் தலைவியும் ஒருசேர மகிழ்வர்.  அம்மகிழ்வு அனைவருக்கும் பொதுநிலையில் இனிமை தருவதாகும்.  அந்நிகழ்வை விரைவில் செய்வாயாக என்று தோழி, தலைவனிடம் கூறும் பாங்கு உளவியல் தன்மையில் அமைந்ததாகும்.  இங்கு தோழி நட்பினளாகிய தலைவிக்கு இனிமை சேர்ப்பவளாய் அமைந்து நல்வாழ்வு அமைய துணைநிற்கும் போக்கினைப் பார்க்க முடிகிறது.

அன்பின் வலிமையைக் காட்டும் நட்பு

காதலில் களவுவாழ்வு அனைவரும் போற்றும் கற்பு வாழ்வாக மலர வேண்டும்.  இக்கற்பு வாழ்வில் காதல் நிலையாக நிற்க வேண்டும்.  இதுவே உண்மை அன்பின்  வலிமையாகும்.  இந்நிகழ்வைத் தோழி தலைவனிடம் எடுத்துக்கூறி உண்மை அன்பு நிலைபெற நற்பாலமாக அமைகின்றாள்.  ஊர்மக்கள் அறிய தலைவியைத் தலைவன் மணம் செய்ய வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்துவாள்.  தலைவனோ களவு வாழ்வையே விரும்பி காலம் கடத்துகின்றான்.  இவனின் போக்கை நேரிடையாகக் கண்டிக்காதத் தலைவி வாட்டமுறுகிறாள்.  இதனை உணர்ந்த தோழி, அனைவரும் அறிய தலைவியை உடனே மணம் புரியுமாறு குறிப்பாக வற்புறுத்துவாள்.
தலைவியைக் காண வரும் உன்வருகை தடைபட்டதால் எம் தலைவி பெரிதும் வருத்தமுறுகிறாள்.  இந்நிலை தெரிந்தும் ஏன் காலம் தாழ்த்துகிறாய்.  அறிவுடையோர் நல்இன்பத்தையே அடைய விரும்புவார்கள்.  எனவே, அறிவுடைய நற்செயலைச் செய்வதற்கு முழுமையாய் ஈடுபடு என்று தலைவனின் பாங்கன் போன்று பாங்கி உரிமையுடன் எடுத்துரைக்கும் நிலையினை அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

நாள்இடைப் படின் என்தோழி வாழாள்
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ? வான்தோய் வெற்ப(பா.112.9-13)

என்னும் பாடலடிகள் மூலம் தலைவன் மீது தலைவி வைத்திருக்கும் அன்பும், திருமணம் செய்வதில் காலம் தாழ்த்தியமையால் தலைவிபடும் துயரமும் ஒருசேர உணரப்படுகிறது.  இவ்விருவரின் சேர்க்கையில் தோழி ஓர் இணைப்புப்பாலமாக விளங்குவதை அறியமுடிகிறது.

அன்பே முதன்மை

குடும்பவாழ்வியல் நல்நிலையில் அமைவதற்கு அன்பு நிலைத்த காரணமாய் அமைகிறது.  அவ்வாழ்வியல் சிறக்க பொருள் ஈட்டுவது கட்டாயமாகிறது.  களவு, கற்பு என்னும் இரு நிலைகளிலும் பொருள் தேடுதல் பொருட்டு தலைவன் பிரிதலுண்டு.  பொருளைப் பெறநினைக்கும் தலைவன், தலைவியின் மாறுபட்ட தோற்றத்தைக் கண்டு தன்போக்கினைத் தற்காலிகமாக மாற்றிக் கொள்ளும் நிலையையும் பார்க்கமுடியும்.  இந்நிலையைச் செலவழுங்கல்என்னும் துறையில் அடக்கிப் பார்க்கலாம்.

ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயர்த்த காலை மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே(பா.5.20-26)

என்னும் பாடலடிகள் மூலம் தலைவியின் பெருமூச்சால் நல்மலர்கள் தம் தன்மையை இழந்தன.  அவளும் பெரிதும் வாட்டமுற்றாள்.  இந்நிகழ்வைக் கண்ட தலைவன் தான் பொருள் ஈட்டச் சென்று விட்டால் எங்ஙனம் இருப்பாள் என்று  உணர்ந்து தன் செலவினைத் தவிர்த்து விடுகின்றான்.

திருவள்ளுவரும் செலவழுங்கல் துறையைச் சிறப்பாகக் காட்டுகிறார்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை

என்னும் குறள் மூலம் தலைவன் மீது தலைவி மிகுந்த அன்பு வைத்திருந்ததால் தன்னை விட்டுப் பிரிந்து செல்லக் கூடாது என்று கருதும் போக்கினைப் பார்க்கிறோம். அதற்கேற்றார் போன்று தலைவனும் தன் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அன்பிணைப்பில் இனிமை காணும் போக்கினைப் பார்க்கிறோம்.

தலைவியின் உள்ளுணர்வை உணர்ந்த தலைவன் தான்சென்ற செயலில் வெற்றி பெற்று, தலைவியைக் காண்பதற்குத் தேர்ப்பாகனிடம் விரைவாகத் தேரை ஓட்டும்படிக் கூறுகின்றான்.  எம் தலைவி நல் அழகினையும் நற் பண்பையும் ஒருசேரப் பெற்றவள்.  அவள் மகிழுமாறு சென்று காணவேண்டும்.  எனவே, தேரினை விரைவாகச் செலுத்துமாறு கட்டளையிடுகிறான்.

அருங்கடிக் காட்டான் அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்
அரிமதர் மழைக்கண் அமைபுரை பணைத்தோள்
அணங்குசால் கலிமாப் பூண்ட தேரே(பா.114.12-16)


மேற்காட்டிய பாடலடிகள் மூலம் தலைவியின் மீது தலைவன் வைத்திருக்கும் உண்மை அன்பு வெளிடப்படுகிறது.

பொருட்செல்வம் அனைவரையும் பொருள் உடையவராய் மாற்றும் தன்மையது.  அகம், புறம் என்றும் இரு வாழ்வியல் நிலைகளிலும் பொருளின் தேவை மிகுதியாகும்.  இத்தகைய செல்வம் தம் வாழ்விற்கும் பொது வாழ்விற்கும் பெரிதும் துணைநிற்கும் தன்மையதாகும்.  இவ்வறிவினை தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்த செய்தியினை அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்(பா.155.1-3)
 
    முறையான செல்வப்பெருக்கால் அறவாழ்க்கை சீராய் அமைவதற்கும் எவரிடமும் இரவாதத் தன்மையைப் பெறுவதற்கும் உரிய சூழ்நிலை உருவாகும் என்பதை மேற்கூறிய பாடலடிகள் உறுதிப்படுத்துகின்றன.

தொகுப்புரை

அகம்என்னும் சொல்லை முதலாகப் பெற்றுள்ள இந்நூல் மாந்தர்தம் அகவாழ்வியலை முழுமையாகக் காட்டும் வாழ்வியல் நூலாகும்.

   தலைமக்களின் வாழ்வியலில் பாங்கன் பாங்கி ஆகியோரின்   செயல்பாடுகளில் தோழியின் பங்கு மிகுதியுமாய் இருப்பதை அகநானூற்றின் மூலம் உணரலாம்.  தலைமக்கள் மீது தோழிகொண்ட அன்பு நட்பின் உயிர்ப்பாக அமைந்துள்ளதை அறிந்து போற்ற முடியும்.

தலைமக்களின் ஒருமித்த அன்பு வளர்ச்சியுற்று அருளாகச் சமூகத்திற்கு உதவும் உயர்நிலையை அடைவதையும் உணரலாம்.

மாந்தர்தம் வாழ்வியலுக்குப் பொருட்செல்வம் தேவை என்பதும் முறையாய் ஈட்டிய செல்வம் அகவாழ்வில் தமக்கும் பொதுமைக்கும் பயன்படும் பாங்கினையும் இந்நூலின் மூலம் அறியமுடிந்தது.

பொதுநிலையில் மாந்தர்தம் அகவாழ்வியலில் அன்பு கலந்த வாழ்க்கையே இனிய வாழ்க்கைக்கு வழியமைக்கும் என்றும் இந்த அன்பு நெறியே அருள் நெறியாக மாறி அனைவர்க்கும் நலத்தைக் கொடுக்கும் என்பதும் அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும்
 ------------உதவிப்பேராசிரியர்(ம)தலைவர்,தமிழ்த்துறை, குருநானக்கல்லூரி.

Monday 9 April 2012

விளிம்புநிலை மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குரிய தெளிவான செயல்திறன்களை மேம்படுத்துதல் -ம.செந்தில்குமார்


ஒரு கல்லூரி ஆசிரியரின் பணி எந்த இடத்தில் தொடங்குகிறது? பள்ளிக்கல்வியை நிறைவு செய்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ மாணவிகளைப் பருவத்தேர்வுகளுக்கு (Semester Exams) ஆயத்தப் படுத்துவதிலா?  இவ்வாறு தொடங்கும் ஆசிரியப் பணி அவர்களுக்கு உயர் விழுக்காட்டு மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்து கல்லூரிப் படிப்பை முடிக்கச்செய்வதோடு நிறைவுபெற்று விடுகிறதா?
நடைமுறையில் நம்பணி இப்படித்தான் வரையறை செய்யப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாகக் கூறினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கணிப்பொறி நிறுவனங்களுக்கும் தகுந்த மாதிரி சிலநூறு மாணவர்களையே உற்பத்தி செய்து கொடுக்கிறோம்.
எந்தவிதமான சமூக மதிப்பீடுகளும், உள்ளீடும் அற்ற ஒரு கல்விமுறையை நாம் மாணவர்களின் மூளைக்குள் திணிக்கிறோம். இந்தக் கல்வி முறையை பாவ்லோ பிரையரே போன்ற நவீன கல்வியாளர்கள் வங்கிமுறைக்கல்வி என்று அழைக்கிறார்கள். மாணவர்களின் தலையைத் திறந்து வங்கிக் கணக்கில் போடுவது போல பாடப் பொருளை ஆசிரியர் இட்டு நிரப்பும் இந்தக் கல்விமுறையில் உரையாடலுக்கான சாத்தியங்கள் இல்லை. வரிசை வரிசையாய் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் அடிமைகளாக உணர்கிறார்கள். இந்த வகைக் கல்வியில் மனித நேயமில்லை, பரஸ்பரப் பகிர்வு இல்லை. இந்த முறையானது தேர்வுகளை மையப்படுத்தி மதிப்பெண்ணைத் துரத்தியபடியே நடக்கும் தொடர் கண்காணிப்பாக உள்ளது.
மாணவர்களின் மீது ஈவு இரக்கமற்ற ஆக்கிரமிப்பை ஆசிரியர் நிகழ்த்த வேண்டியதாகிறது. மதிப்பெண் விழுக்காடுகளை மையப்படுத்தி இயங்கும்போது மாணவனின் முதல் எதிரியாக ஆசிரியரே நிற்க வைக்கப்படுகிறார். இந்த வங்கிமுறைக்கல்வி கற்பவரையும் கற்பிப்பவரையும் ஒருவருக்கெதிராக ஒருவரை நிறுத்திக் கற்றலை யுத்தமாக்குகிறது. இதற்கு மாறாக உயிர் ததும்பும் வகுப்பறைகளை உருவாக்கம் பொறுப்பு நமக்கு உள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான செயல்திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள், செய்முறைத் தேர்வுகள் அமைக்கப்பட வேண்டும். இதற்குச் சாண்றாக சோவியத் ரஷ்யாவின் கல்வியல் அறிஞர் அலெக்ஸாந்தர் செலன்கோவின் பங்களிப்புகளைக் குறிப்பிடலாம். மாணவர்கள் கல்விச் சாலைகளில் மிகுதியான நேரத்தைச் செலவழிக்கும் வகையில், தம் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பயிற்சி பெறும் முறையில் அவரது உயர்கல்வித்துறை சார்ந்த தொழிற்கல்வி கட்டமைக்கப்பட்டது. ஐரோப்பியக் கல்வி முறை மாணவர்களைத் தனி மனிதர்களாக நடத்தியது. அவர்களை இயந்திரக் கதியில் அணுகியது.
மாணவர்களை எண்களால் அழைக்கிற சிறைக்கைதி முறையையே அது நமக்கு வழங்கியுள்ளது. நம் கல்விமுறை மாணவர்களை உடலால் முடங்கிக் கிடப்பவர்களாக ஆக்கி வைத்திருப்பதாகச் செலன்கோ குறிப்பிடுகின்றார். மாணவர்கள் உடல் உழைப்பிலும், கூட்டுக்குழு மனப்பான்மையுடன் செயல்புரியத் தகுந்த வேலைகளில் சுணக்கம் காட்டுவது பற்றியும் அவர் ஆராய்ந்தார்.
அதன் பயனாக உருவானதே விடுமுறை நாட்களின், ஓய்வு நேரங்களின் பணிக்காலங்கள் என்ற திட்டம். பின்னர் இத்திட்டம் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கல்வி பயிலும் காலத்திலேயே ஆதார வேலைகளைச் செய்ய பழக்குதல் என்னும் நடைமுறைத் திட்டத்தை செலன்கோ உருவாக்கினார். பின்னர் மகாத்மா காந்தி உருவாக்கிய ஆதாரக் கல்வித் திட்டமும் இதே கருத்தையே வலியுறுத்தியது. இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் கிராமப்புற மாணவர்கள் மட்டுமன்றி நகர்ப்புற மாணவர்களும் இயற்கை வேளாண் சார்ந்த தொழில்களை மாணவப் பருவத்திலேயே பழகவேண்டும் என்கிறார்.
பொறியியல், மருத்துவம் போன்ற கல்வியே உயர்ந்தது என்ற செக்குமாட்டு மனப்பான்மையையே சமூகத்தில் காண்கிறோம். விளிம்புநிலை மாணவர்கள் பலர் உணவகங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் போன்றவற்றில் பகுதிநேரப் பணிகளைச் செய்கிறார்கள். மாணவப் பருவத்திலேயே இது போன்ற பணிகளில் பகுதி நேரமாக ஈடுபட்டு பணி செயல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும்போது மேற்காணும் பணிகளில் தனியாகவோ, கூட்டாகவோ ஈடுபட்டு பொருளீட்ட முடியும்.
அரசு, வங்கி, ரயில்வே, மைய மாநில தேர்வாணையப் பணிகளில் சேர்வதற்கான பகுதிநேர, விடுமுறை வகுப்புகள் கல்லூரிகளில் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான (Civil Service Exam) வழிகாட்டு மையங்களை, பயிற்சி மையங்களை நிறுவி தொடர்புடைய துறை நிபுணர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இத்தேர்வுகளை எதிர் கொள்வதற்கான மனத்துணிவை, பயிற்சியை தொடர்ந்து தரவேண்டும். கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் பாடத்திட்டங்களோடு இணைந்த தொழிற் பயிற்சி பெறும் வகையில் கல்விமுறை அமையவேண்டும்
மன உழைப்பே உயர்ந்தது, உடல் உழைப்பு தாழ்ந்தது என்கிற மனப்பான்மையை மாற்றும் வகையில் தொழில்திறன் சார்ந்த பயிற்சிகள், செய்முறை விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். செல்வ நுகர்ச்சி மீது உள்ள அளவிடற்கரிய பற்றைச் சமுதாய அக்கறையாக மடைமாற்றம் செய்யும் வகையில் விளிம்புநிலை மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்குரிய செயல்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தவேண்டும். இப்பணியில் அரசு, கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் ஆகியோர் முக்கோணத்தில் இணைந்து தன்முனைப்பற்ற நிலையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் வருங்காலச் சந்ததி வளம்பெறும்.

                                           உதவிப் பேராசிரியர், குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை

பயன்பட்ட நூல், இதழ்

  1. உலகக் கல்வியாளர்கள், இரா. நடராசன்,  பாரதி புத்தகலாயம், 2010
  1. புதிய புத்தகம் பேசுது, ஜனவரி 2012, மார்ச்சு 2012  இதழ்கள்
                                                                           






தமிழ் நவீனத்துவத்தின் மேல் அதிரும் ஜி. நாகராஜனின் உடல் என்னும் பறை - முனைவர். நா.பிரவீன் குமார்



மத்தியதர வர்க்கத்தின் சாய் நாற்காலி அல்ல நாவல்..

நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை.மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் ,  தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் அதிகாரத்தை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சாந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமுறைகள் குறித்த கவனங்களை  விசாரணைகளைக் காண இயலுவதில்லை. வரலாறு எனும் பெரும் திரையில் மனித உடலின் வலியும் துடிப்பும் மிக்க நடனத்தைத் தமிழ் நாவல் மிக அரிதாகவே தொடுகிறது.வடிவத்தில் எத்தனைப் புதுத் திறப்புகள் வந்தாலும் அனுபவம் சார்ந்த தீவிரமான விரிந்த வாக்கைத் தளங்கள் இல்லாதபோது கலைரீதியாக ஒரு படைப்பு கொள்ளும் முடக்கம் இரங்கத்தக்கது. ஆனால் உலக நாவல் மேற்குறித்த நடுத்தர வர்க்கத் தன்மையைத் தாண்டி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. நவீன வாழ்க்கையின் நுண்களங்களைத் தீண்டவும், , சமூகம் வரலாறு பண்பாடு என்ற பின்னலான வெளியில் மனித சலனங்களை பிரதிபலிக்கவும், வாழ்வின் எல்லையின்மையை அகலத் தழுவி விரியும் விவாத வெளியை கட்டமைக்கவும் மிக நெகிழ்ந்ததும் உரையாடல் தன்மை வாய்ந்ததுமான ஓர் உயர் கலை வடிவம் நாவல்தான் என்பதை உலக நாவல் வரலாறு நிரூபித்திருக்கிறது.




 தமிழ்ப் புனைவில் எதிர் நவீனத்துவ அறம்..

தமிழ் நவீனத்துவத்தின் கட்டுபெட்டித் தனங்களுக்கு எதிராக, உள்ளிருந்து எழுந்த தீவிர குரல்களாக வெளிப்பட்ட  ஜி. நாகராஜன், பிரமிள் முதலியோர் சராசரித் தன்மைக்கு எதிரான தங்கள் கவர்ச்சிமிகு வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் நம்மை ஊடுருவுகின்றனர். இங்கு ஜி.நாகராஜனை எடுத்துக் கொள்ளும் போது குடும் எல்லைகள் தாண்டாத ஒரு தமிழ் நவீனத்துவத்திற்குள் உருவாகி வந்த நாவலின் நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராக அவரது பயணம் தொடங்குகிறது. ஜி. நா. வின் படைப்புலகம் முதலில் பௌதிகமான நிலைமைகளில் இயங்காத நவீனத்துவ புனைவுகளின் மனவெளியிலிருந்து, குருதியும் தசையுமாய் அதிர்ந்து கொண்டிருக்கும் சமூக எதார்த்தங்களின் அடிமட்டத்திற்கு தரை இறங்குகிறது.அப்படித்தான் குறத்தி முடுக்கு தமிழ்ப்புனைவில் ஒரு புதிய திறப்பாக வருகிறது. அது காட்டும் உலகம் நவீனத்துவத்தின் அறிவார்த்த நாகரீகத்தின் அதிர்ச்சிமிக்க பின்தோற்றம்.வரலாற்றின் இக்கட்டத்தில் மனித உடல்களின் புதிய அதிர்வுகளை அது ஏந்துகிறது. அங்கு நவீன யுகத்தின் கோட்பாட்டுத் தர்க்கங்களும் , கற்பித லட்சியங்களும் சிதறிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீன சமூக கண்ணாடிக் கவர்ச்சிகளின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் கைப்பையும் வன்மங்களையும் அது அகழ்ந்தெடுக்கிறது. குறத்தி முடுக்குவில் பேசப்படுவன எல்லாம் உடல்கள். அவை இந்த நவீன சமூக அதிகாரங்களின் அதிகபட்ச வன்முறைகளுடன் தம் அடிப்படை வாழ்விச்சைகளோடு மோதியபடியே தம் தினசரியில் நவீன வாழ்வின் புதிர்மிக்க நாடகத்தை  நடத்திக்கொண்டிருக்கின்றன. இதுதான் குறத்தி முடுக்கின் களம்.. இதன் மீதான ஒரு கோடிட்டுக் காட்டல்தான் தங்கம் என்ற பாலியல் தொழிலாளிக்கும் பெயர் சுட்டப்படாத ஒரு பத்திரிக்கையாளனுக்கும் இடையிலான, மரபான வடிவங்களில் பிடிபடாத ஒரு காதலின் புதிர்மிக்க சலனங்கள்.


இந்தப் பத்திரிக்கையாளன் வாழ்க்கை பற்றி சில தெளிவுகள் கொண்டவன். காமத்தை ஒரு இச்சை தீர்ப்பு என்பதுக்கு அப்பால், அதில் காதலின் மாய சிறகுகள் முளைப்பதற்கான சாத்தியங்களை ஏற்க மறுப்பவன்.ஆனால் தங்கத்துடனான உறவில் இவனது அனைத்து தர்க்கங்களும் சிக்கலடைந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் அவன் தங்கத்துடனான உறவில் மெல்ல மெல்ல காதலின் உயர்படி நிலைகளைக் கண்டடைகிறான். அனால் இவனது குணவார்ப்பின் எதிர்நிலைதான் தங்கம்.அவள் இறுதி வரை சமநிலை குலையாத ஆளுமை வார்ப்பு பெற்றவள்.அவளது காதல் எத்தகையது...அது உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறது.ஆனால் அவன் நாவல் முழுக்க இடறிக் கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை நிலைகொள்கிறாள். இந்த முரண் இவ்விருவருக்கிடையே வாழ்வின் அற்புதமான பகடையாட்டத்தை ஆடிக் காண்பிக்கிறது.இங்கு தான் ஜி. நாகராஜன் வாழ்க்கையை மிக அரிய கோணங்களில் நமக்கு வாசித்து காட்டுகிறார்.


ஆதி உடலை அகழ்ந்தெடுத்தலும் தொல் அறத்தை மீட்டலும்..

உயர்ந்த கலைப்படைப்புகள் பசி, காமம் முதலிய மனிதத்துவத்தின் மிக ஆதாரமான பிரச்சனைகளையே மையமிடுகின்றன. சிலம்பு மணிமேகலை போன்ற தமிழ்ப் பேரிலக்கியங்கள் இதன் உயர் லட்சிய வடிவங்கள் எனலாம். மனிதன் வரலாற்றின் வழி வந்தவன். இயற்கையிலிருந்தும் உயிரியல்புகளிலிருந்தும் மிகச் சேய்மைபட்ட கலாச்சார வாழ்வியலை வந்தடைந்திருப்பவன். இந்த நவீன மனிதனுக்குள் உள்ளுறைந்திருக்கும் தொல்பண்பையும் உயிரிச்சைகளில் கலாச்சார மயக்கங்களற்ற நிர்வாணத்தன்மையையும் வெளிக்கொணரத்தான் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. மனிதனுக்குள் காணாமல் போன தொல்மனிதனை தொட்டுவிட ஒருவகையில் இலக்கியங்கள் முயல்கின்றன. ஜி. நா. வின் குறத்தி முடுக்கு உள்ளிட்ட படைப்புகள் இந்த திசையில் செல்வதாகத்தான் படுகிறது. குறத்தி முடுக்குவில் மீண்டும் மீண்டும் பேசப்படுவது காமமும் பசியும்தான்.


மனித உடல் ஓர் உயிரியல் அமைப்பு மட்டுமல்ல.அது ஒரு சமூக வரலாற்று பண்பாட்டுக் கட்டமைப்பாக இருக்கிறது.சமூக மதிப்பீடுகளை கடத்தும் ஊடகமாகவும் கலாச்சார புனைவுகளைக் கற்பிதங்களை ஏற்று அதன் ஒழுங்குமுறைகளை , நடத்தை விதிமுறைகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களாகவும் மனித உடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுக்க்களிலிருந்து விடுவித்து மனித உடலின் ஆதி இயற்கைத்தன்மையை, வேட்கையை அதன் குழந்தைமையை, இசைமையை மீட்ட பாலியலை மையமிடும் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. பெண்ணியவாதிகள் இக்கோணத்தில் உடலரசியல் என்ற கூரிய பரிமாணத்தில் பேசி வருவதை நாம் அறிவோம்.குறத்தி முடுக்குவில் ஆளப்படும் பாலியலும் இந்த தளத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர முடிகிறது .மனித சமூகத்தில் காமம் ஒரு இயற்கை நடவடிக்கையாயன்றி பால் சார், பண்பாடு சார் புனைவுகளும் அதிகாரங்களும் கொண்டவையாய் நிகழ்கிறது. பதற்றங்களும் தன்முனைப்பும் நிறைந்த இந்த நாடகீயமான காமத்தின் ஆழத்தில் மனிதத்துவத்தின் துடிப்புமிக்க களங்கமற்ற பால் விழைவை ஜி. நா.வின் எழுத்து எப்போதும் மீட்டெடுக்கிறது. அரசியல்மயமாகப்பட்ட பாலியலை திரைவிலக்கி அதன் ஆழத்தில் துளிர்க்கும் ஆதிமனத்தின் அன்பை அது எப்போதும் துளிர்க்கச்செய்கிறது.



குறத்தி முடுக்குவின் எந்த கதாபாத்திரங்களும் முழுமையாக குணவார்ப்பு பெற்றவையல்ல. அவை மூட்டமான நிழலுருவங்களாகவே வந்து செல்கின்றன, ஒவ்வொரு வாழ்விலிருந்தும் ஜி. நா காண்பிப்பது ஒரு வெட்டுக் காட்ச்சி மட்டுமே. அனால் அவை இட்டு நிரப்ப வேண்டிய கணமான இடைவெளிகளை வாசகத் தரப்பில் நிறுத்துகின்றன.ஒவ்வொரு பாத்திரமும் காமத்தின் ஆழத்தில் ஒளிரும் காதலையும் காதலின் பாசாங்கில் மறைந்துள்ள காமத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.


தமிழ்ப் புனைவு வெளியில் பாலியலின் மாறுபட்ட தடங்கள்

பாலியலை கலையின் ஓர் உயிர்ப்பகுதியாக வைத்துப் பேணிய கலைப்பாரம்பரியம் நமது எனினும் பாலியலை மனித அறிவாதிக்கத்திலிருந்து விடுதலை செய்யும் முயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு புனைகதைப் பரப்பை நோக்கும்போது கு.ப.ரா., தி.ஜா., ஜெயகாந்தன் முதலிய முன்னணிப் படைப்பாளிகள் நம் நினைவுக்கு வரலாம். கு.பா.ரா பாலியலைத் தாண்டிய இலட்சிய நிலைப்படுத்தப்பட்ட காதலைத்தான் முன்வைக்கிறார். தி.ஜா. பாலியலை எழுதும்போது அதில் ஒரு நிலமானிய கால ரசனை ரேகையொன்று ஓடுவதை மறுப்பதற்கில்லை. ஜெயகாந்தன் பாலியலை கையாளும்போதெல்லாம் வெளிப்படும் அவரது அறிவார்த்த முனைப்புகள் சலிப்பூட்டக் கூடியது. முழுக்க முழுக்க ஒரு விளிம்பு நிலை வாழ்விலிருந்து, பாலியலின் அரசியலை உரித்து, மனித இயல்பூக்கங்களை பேச விழையும் ஜி. நாகராஜனின் படைப்புலகம் முன்குறித்த எதன் சாயலுமற்ற முன்னுதாரணங்களற்ற புதிய பிரதேசத்தை அறிமுகப்படுத்துகிறது.


அந்த மின்பரிமாற்றம் தொலைவில் நிகழவில்லை ..

குறத்தி முடுக்குவின் இறுதிப் பகுதி ஒரு உருவகமான காட்சியோடு நிறைவுறுகிறது. தனக்குள் காதலின் பேரலைகளை எழுப்பிவிட்டு தன் பழைய கணவனோடு வாழச்சென்றுவிட்ட தங்கத்தைத்  தற்செயலாகப் பார்க்க நேர்ந்த அந்தப் பத்திரிக்கையாளன் அவளது வீடு வரை சென்று ஒரு விருந்தாளியின் அசௌகரியத்தோடும் அந்நியத்தோடும் இருந்துவிட்டு அறைக்குத் திரும்புகிறான். தங்கத்தின் தேர்வுகள் அவனது தர்க்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கின்றன. வாழ்வின் எந்த நிலையிலும் குலையாத அவளது சமனிலை முன் அவன் கொந்தளிக்கிறான். ஆற்றாமை..ஏமாற்றம்அறையில் அவனுக்குத் தூக்கமில்லை.இறங்கி வெளியே நடக்கிறான்தொலைவில் ஒரு மின்னல் வெட்டுகிறது..தொலைவில் நிகழ்ந்த ஒரு மின்பரிமாற்றம்என்கிறார் ஜி. நா. அது அவனுக்குள் நிகழ்ந்துள்ள பெரும் குணமாற்றத்தை சூசகமாக உணர்த்துகிறதா. மின்னல் வெட்டிவிட்டது.ஆனால் இடிச்சத்தம் இன்னும் கேட்கவில்லை. தான் எவ்வளவு மாறிவிட்டோம் என்பதை அவன் உணர்கிறான்.ஆனால் அதன் தர்க்கம் இன்னும் அவனுக்குப் புலப்படவில்லை. மழை அடித்துப் பேய வேண்டும் என நினைத்துக்கொள்கிறான். அவன் மனதை நிரப்பும் அந்த கணமான வெக்கையை அது ஒன்றே அப்போதைக்குப் போக்க முடியும்.


அறம் தொலைத்த உற்பத்திப் பெருக்கம் -  தமிழ் நாவல் இன்று
 
                   இன்று தமிழ்ப் புனைகதைப் படைப்பியக்கம் உலகமயமாக்கலுக்குப் பிறகான சந்தை பொருளாதாரத்தின் புதிய  பொருளியல் பண்பாட்டு அலைகளில் சிக்குற்று தன்  சாரம் தூர்ந்து போய் நிற்கிறது. நவீன இலக்கியமே பெரும் உற்பத்தி வெளியாகி உள்ளது. தீவிர உழைப்பின் பின்னணியிலான , கலை இயக்கங்களின் பின்னணியிலான கண்டுபிடிப்புகளும் கருத்தியல்களும் அதன் உள்ளடக்கமும் அறங்களும் இழந்து விற்பனைக்குத் தயாரான பண்டப் பொருள்களாகியுள்ளன. இன்று ஒரு புனைகதைப் படைப்பாளி வாசகர் திரளை ஒரு சந்தையாக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு அறம் இழந்த போயுள்ளான். இதன் பின்னணியிலேயே சந்தை விழைவுகளோடு  பெரிய அளவிலான பல நூறு பக்க நாவல்கள் வருகின்றன. பெரிய நாவல்களுக்கான தேவையான விரிந்த  சமூக வரலாற்றுத் தளங்களுக்கான உண்மையான பிரக்ஞை ஏதுமின்றி சந்தையை மட்டுமே குறிவைத்து இவை பெருகுகின்றன. இந்நிலையில் மிகவும் சனாதனத் தன்மையோடு விளங்கிய ஒரு தமிழ் நவீனத்துவத் தலைமுறைக்குள் நின்றபடி  அதன் அனைத்து அதிகாரங்களையும் ஊடறுத்து உடலையே , உடல் பற்றிய பிரக்ஞையையே ஒரு பறை போல் அதிர வைத்த ஜி. நாகராஜனிடமிருந்து நாம் இன்றுக்கான அற ஊக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

                                                     - பிரவீண் குமார், உதவிப் பேராசிரியர், குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை

சல்மாவின் ஜாமங்களில் கரையும் உடல்-மொழி – முனைவர் வி. அருள்,




காலனியத்துவத்திற்குப் பிறகான சமூகத்தில் அரசியல், தத்துவம் முதலிய பல்வேறு நிறுவனங்கள் மனித வாழ்வியலில் நேரடியாக தாக்கம் செலுத்தின.  இம்முரண்களிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சிக்கும் போது அதனின் உள்வளையத்திற்குள் சிக்குண்டு உழலுகிறான்.  இவ் வாழ்வியலைப் பதிவு செய்யும் இன்றைக்கான இலக்கிய வடிவமாக புதின வகைமை திகழ்கிறது.  மனித வாழ்வியலின் பல உள் முரண் இயங்கியலை, அதன் விளைவு, நெளிவுக்கேற்றவாறு சொல்லக்கூடிய சக்தி புனைகதை வடிவத்திற்கு மட்டுமே உரியது.  புனைகதை வகைமைக்கு ஒரு பாரம்பரிய வரலாறு உண்டெனினும் இவ்வரலாற்றை 1980 முன் 1980க்கு பின் என பிரித்தறிவது அவசியம், 1980 முன் தமிழ்ப் புனைகதை பொருண்மை அடிப்படையிலும், எடுத்துரைக்கும் உத்தியிலும் பெரும் மாற்றமில்லை.  ஆனால் 1980 க்குப் பின் புனைகதை பல மாற்றங்களைப் பரிசோதனை முயற்சியோடு எதிர் கொண்டு வந்துள்ளது.  இதில் முக்கியமாக கதையமைப்பும் கதையை எடுத்துக் கூறும் முறைமையும் குறிப்பிடலாம்.
காலந்தோறும் வாழ்க்கையை பேசும் இலக்கியமானது பல்வேறு உள் முரணியலை தன் நிலைப்பாட்டோடு பதிவு செய்ததில்லை.  ஏனெனில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாகத் தான் புதினத்தைக் கருதினர்.  தன்னின் பரிசீலனையாகக் கருதவில்லை.  ஆனால் 1980 க்கு பிறகான புனைகதைகள் தன்னின் பரிசீலனையாகவும்  தன் மீதான சமூகத்தின் கருத்தியலையும் புனைவு வெளிக்குள் கொண்டு வந்தனர்.  இத்தகைய உத்திமுறைகளைப் பெண் படைப்பாளர்களிடம் இன்று அதிகமாக காணமுடிகிறது.  இதன் பின்னணியில் தான் சல்மா அவர்களையும் புரிந்துக் கொள்ளமுடிகிறது.  கவிஞராகத் தன் மனவெளி மௌனங்களை மிக நுண்ணிய அரசியலோடு வெளிப்படுத்தி தமிழ்க் கவிதையுலகின் வெற்றிடத்தை நிரப்பியவர்.  குறுகிய வெளியில் வாழ்வின் எதிர்வினையாக முடியும் கவிதையில் உள் முரண்களின் முழுமை வெளிப்படா போனதற்கான ஏக்கத்தை சல்மா கவிதைகளின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இம் மன அழுத்தத்திலிருந்து  விடுபட இரண்டாம் ஜாமங்களின் கதை எனும் நாவலை எழுதியுள்ளார்.

சல்மாவின் இந்நாவல் இஸ்லாமிய சமூகப் பெண்களின் குரலாக உள்ளது.  தமிழ்ப்  புனைகதையில் உடல் பற்றியும் உடல் மீதான வன்மங்கள் குறித்தும் ஆழ்ந்த பதிவுகள் ஏதுமில்லை. கு.ப.ரா , தி.ஜா போன்றோர்களின் பாலியல் உறவு குறித்த கதையாடல்களே மாற்றுப் பதிவாகக் கருதப்பட்டுவருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்மங்களைத் தனது நாவலுக்குள் மிக எதார்த்தமாக சல்மா பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய சமூகத்திற்குள் நிகழும் பெண் அடிமைத்தனம், ஆணின் வன்ம செயல் முதலியவற்றை வஹிதா-சிக்கந்தர் குடும்ப வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  
மதம் : பெண்கள் வாழ்வியல் முரண்
மனித வாழ்வியலில்  மதம் மிகப் பெரிய சர்வாதிகாரியாகத் திகழ்கிறது. மதங்களின் இறுக்கம் மனித வாழ்க்கையையே மாற்றுகின்றன. குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை. அசுலாம் சம்யம் பெண்களை மிகவும் இறுக்கமான இறுக்கமான சூழலிலேயே வைத்துள்ளது. இந்நாவலில்  ஒரு பகுதி மூன்று தலைமுறை இசுலாம் பெண்களின் வாழ் நிலையைக் கூறுகிறது. விதவையான பீவீயம்மாள், சமூகக் கட்டுப்பாடுகளுடன் எவ்வித பிறழ்வும் இன்றி தனக்கு நிகழ்த்தப்படும் துன்பத்தைக் கூடி விதி எனும் பெஉஅரில் எதிர்கொள்கிறார்.
இந்நாவலில் பாத்திமா, பிர்தவ்ஸ், நபியா போன்ற பெண்களின் இயல்பான வாழ்நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இஸ்லாமியம் பெண்ணியம்
ஆண்களின் ஆழ்மன விரத்தியை எதிர்மை பண்போடு பெண்களிடம் தான் தோப்பில் முகமது மீரான் தனது சாய்வு நாற்காலி நாவல் முழுக்க இவ்வுத்திமுறையைப் வெளிப்படுத்தியிருப்பார்.   சல்மாவும் தனது நாவலில் ஆண் கதாபாத்திரங்கள் முழுக்க எதிர் பண்போடு உலவ விட்டுள்ளார்.  இந்நாவலில் வரும் காதர், கரீம், சையது, ராவுத்தர், ஜமால் ராவுத்தர், லத்தீப், சிக்கந்தர், சுலைமான் என அனைத்து கதாபாத்திரங்களும் பெண்களின் மனப்பதிவில் வன்ம குணமுடையவர்கள் ஆவர்.  இந்நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்களைக் காம வெறியர்களாக கட்டமைத்துள்ளார்.  சிறந்த ஆண் ஒருவனை மையப்படுத்தியிருந்தால் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்திற்கே குறியீடாகப் புரிந்து கொள்வார்கள்.  அது மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரங்களை மழுங்கடிக்கவும் நேரிடும் இதனைக் கருத்திற் கொண்டே இந்நாவலாசிரியர் இவ்வுத்திமுறையைப் பின்ற்றியிருக்கலாம்.

வயதான ஆண்களுக்கு சிறு வயது பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது இஸ்ஸாமிய சமூகத்தில் நடைமுறையிலுள்ள  வழக்கம்.  சிறுபெண்ணின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத ஆண்கள் தனது ஆண் என்ற மனநிலையை வன்மமாக வெளிப்படுத்துகின்றனர்.  இதற்கு பதிலீடாக நபியா எனும் பெண் தனது உடல் தேவைக்கு வேறொரு மத ஆணோடு  பிணைப்பிணை ஏற்படுத்திக் கொள்கிறாள்.  இது தன் கணவனுக்கு தெரிய வரும் நிலையிலும அதைப்பற்றி எவ்வித மனஅதிர்வுமின்றி தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் செயல் இஸ்ஸாமிய பெண் சமூகத்தில் பெரிய கலக செயலாகவே உணரமுடிகின்றது. 
இச்சமூகப் பெண்கள் பருவமடைந்தவுடன் தனியாகவே இருக்க வேண்டிய சூழலை நிர்பந்திக்கின்றனர்.  ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு என்பது திருமணம்-இறப்பு நிகழ்வுகளில் மட்டுமே .  இந்நாவலில் இவ்விரு நிகழ்வுகளும் வருகின்றன.  இந்நிகழ்வுகளின் போது கூடும் பருவமடைந்த பெண்கள் தன்னின் உடல் பற்றிய பேச்சில் புணர்ச்சியின்  வாசனை வெளிப்படுவதை உணரமுடிகின்றது.
நபிதா-மும்தாஜ் இவர்களுக்கிடையே நிகழும் உறவு வாசகர்களிடை பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்துகிறது. 
இந்நாவலில் சல்மா பெண் சமுதாயத்தின் மீது திணித்துள்ள வன்மங்களைத் தகர்த்தெறிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.  இருப்பினும், சமய சார்ந்த நிகழ்வுகளில் எவ்வித மறுப்புமின்றி உடன்பாட்டு தன்மையோடு செல்வதை உணரமுடிகின்றது.  இந்நாவல் நிகழும் காலம் மிக குறைவானதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இஸ்ஸாமிய சமூகத்தின் வாழ்வியலைக் குறிப்பாக பெண்களின் உடல்-மன வெளிகளை விரிவாக பேசியுள்ளார்.  நாவல் மிக நீண்டிருப்பினும், எவ்வித வாசிப்பு சலமின்றி, இயல்பான கதைப்போக்கோடு அமைந்துள்ளது.  இதுவரை அறியப்படாத சமூகத்தின் உணர்வுகளை வெளிகொணர்ந்து நாவல் உலகிலுள்ள வெற்றிடத்தை நிரப்பியுள்ளார்.

                                           முனைவர் வி.அருள் , குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை