Monday 9 April 2012

விளிம்புநிலை மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குரிய தெளிவான செயல்திறன்களை மேம்படுத்துதல் -ம.செந்தில்குமார்


ஒரு கல்லூரி ஆசிரியரின் பணி எந்த இடத்தில் தொடங்குகிறது? பள்ளிக்கல்வியை நிறைவு செய்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ மாணவிகளைப் பருவத்தேர்வுகளுக்கு (Semester Exams) ஆயத்தப் படுத்துவதிலா?  இவ்வாறு தொடங்கும் ஆசிரியப் பணி அவர்களுக்கு உயர் விழுக்காட்டு மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்து கல்லூரிப் படிப்பை முடிக்கச்செய்வதோடு நிறைவுபெற்று விடுகிறதா?
நடைமுறையில் நம்பணி இப்படித்தான் வரையறை செய்யப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாகக் கூறினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கணிப்பொறி நிறுவனங்களுக்கும் தகுந்த மாதிரி சிலநூறு மாணவர்களையே உற்பத்தி செய்து கொடுக்கிறோம்.
எந்தவிதமான சமூக மதிப்பீடுகளும், உள்ளீடும் அற்ற ஒரு கல்விமுறையை நாம் மாணவர்களின் மூளைக்குள் திணிக்கிறோம். இந்தக் கல்வி முறையை பாவ்லோ பிரையரே போன்ற நவீன கல்வியாளர்கள் வங்கிமுறைக்கல்வி என்று அழைக்கிறார்கள். மாணவர்களின் தலையைத் திறந்து வங்கிக் கணக்கில் போடுவது போல பாடப் பொருளை ஆசிரியர் இட்டு நிரப்பும் இந்தக் கல்விமுறையில் உரையாடலுக்கான சாத்தியங்கள் இல்லை. வரிசை வரிசையாய் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் அடிமைகளாக உணர்கிறார்கள். இந்த வகைக் கல்வியில் மனித நேயமில்லை, பரஸ்பரப் பகிர்வு இல்லை. இந்த முறையானது தேர்வுகளை மையப்படுத்தி மதிப்பெண்ணைத் துரத்தியபடியே நடக்கும் தொடர் கண்காணிப்பாக உள்ளது.
மாணவர்களின் மீது ஈவு இரக்கமற்ற ஆக்கிரமிப்பை ஆசிரியர் நிகழ்த்த வேண்டியதாகிறது. மதிப்பெண் விழுக்காடுகளை மையப்படுத்தி இயங்கும்போது மாணவனின் முதல் எதிரியாக ஆசிரியரே நிற்க வைக்கப்படுகிறார். இந்த வங்கிமுறைக்கல்வி கற்பவரையும் கற்பிப்பவரையும் ஒருவருக்கெதிராக ஒருவரை நிறுத்திக் கற்றலை யுத்தமாக்குகிறது. இதற்கு மாறாக உயிர் ததும்பும் வகுப்பறைகளை உருவாக்கம் பொறுப்பு நமக்கு உள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான செயல்திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள், செய்முறைத் தேர்வுகள் அமைக்கப்பட வேண்டும். இதற்குச் சாண்றாக சோவியத் ரஷ்யாவின் கல்வியல் அறிஞர் அலெக்ஸாந்தர் செலன்கோவின் பங்களிப்புகளைக் குறிப்பிடலாம். மாணவர்கள் கல்விச் சாலைகளில் மிகுதியான நேரத்தைச் செலவழிக்கும் வகையில், தம் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பயிற்சி பெறும் முறையில் அவரது உயர்கல்வித்துறை சார்ந்த தொழிற்கல்வி கட்டமைக்கப்பட்டது. ஐரோப்பியக் கல்வி முறை மாணவர்களைத் தனி மனிதர்களாக நடத்தியது. அவர்களை இயந்திரக் கதியில் அணுகியது.
மாணவர்களை எண்களால் அழைக்கிற சிறைக்கைதி முறையையே அது நமக்கு வழங்கியுள்ளது. நம் கல்விமுறை மாணவர்களை உடலால் முடங்கிக் கிடப்பவர்களாக ஆக்கி வைத்திருப்பதாகச் செலன்கோ குறிப்பிடுகின்றார். மாணவர்கள் உடல் உழைப்பிலும், கூட்டுக்குழு மனப்பான்மையுடன் செயல்புரியத் தகுந்த வேலைகளில் சுணக்கம் காட்டுவது பற்றியும் அவர் ஆராய்ந்தார்.
அதன் பயனாக உருவானதே விடுமுறை நாட்களின், ஓய்வு நேரங்களின் பணிக்காலங்கள் என்ற திட்டம். பின்னர் இத்திட்டம் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கல்வி பயிலும் காலத்திலேயே ஆதார வேலைகளைச் செய்ய பழக்குதல் என்னும் நடைமுறைத் திட்டத்தை செலன்கோ உருவாக்கினார். பின்னர் மகாத்மா காந்தி உருவாக்கிய ஆதாரக் கல்வித் திட்டமும் இதே கருத்தையே வலியுறுத்தியது. இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் கிராமப்புற மாணவர்கள் மட்டுமன்றி நகர்ப்புற மாணவர்களும் இயற்கை வேளாண் சார்ந்த தொழில்களை மாணவப் பருவத்திலேயே பழகவேண்டும் என்கிறார்.
பொறியியல், மருத்துவம் போன்ற கல்வியே உயர்ந்தது என்ற செக்குமாட்டு மனப்பான்மையையே சமூகத்தில் காண்கிறோம். விளிம்புநிலை மாணவர்கள் பலர் உணவகங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் போன்றவற்றில் பகுதிநேரப் பணிகளைச் செய்கிறார்கள். மாணவப் பருவத்திலேயே இது போன்ற பணிகளில் பகுதி நேரமாக ஈடுபட்டு பணி செயல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும்போது மேற்காணும் பணிகளில் தனியாகவோ, கூட்டாகவோ ஈடுபட்டு பொருளீட்ட முடியும்.
அரசு, வங்கி, ரயில்வே, மைய மாநில தேர்வாணையப் பணிகளில் சேர்வதற்கான பகுதிநேர, விடுமுறை வகுப்புகள் கல்லூரிகளில் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான (Civil Service Exam) வழிகாட்டு மையங்களை, பயிற்சி மையங்களை நிறுவி தொடர்புடைய துறை நிபுணர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இத்தேர்வுகளை எதிர் கொள்வதற்கான மனத்துணிவை, பயிற்சியை தொடர்ந்து தரவேண்டும். கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் பாடத்திட்டங்களோடு இணைந்த தொழிற் பயிற்சி பெறும் வகையில் கல்விமுறை அமையவேண்டும்
மன உழைப்பே உயர்ந்தது, உடல் உழைப்பு தாழ்ந்தது என்கிற மனப்பான்மையை மாற்றும் வகையில் தொழில்திறன் சார்ந்த பயிற்சிகள், செய்முறை விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். செல்வ நுகர்ச்சி மீது உள்ள அளவிடற்கரிய பற்றைச் சமுதாய அக்கறையாக மடைமாற்றம் செய்யும் வகையில் விளிம்புநிலை மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்குரிய செயல்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தவேண்டும். இப்பணியில் அரசு, கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் ஆகியோர் முக்கோணத்தில் இணைந்து தன்முனைப்பற்ற நிலையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் வருங்காலச் சந்ததி வளம்பெறும்.

                                           உதவிப் பேராசிரியர், குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை

பயன்பட்ட நூல், இதழ்

  1. உலகக் கல்வியாளர்கள், இரா. நடராசன்,  பாரதி புத்தகலாயம், 2010
  1. புதிய புத்தகம் பேசுது, ஜனவரி 2012, மார்ச்சு 2012  இதழ்கள்
                                                                           






No comments:

Post a Comment